பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டு!

பாகூர் அருகே சோரியாங்குப்பம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பசுமை தீர்ப்பாயம் தென்பெண்ணை ஆற்றில் மணல் எடுப்பதற்கு தடை விதித்து இருந்தது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதற்கிடையில், சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், தடை உத்தரவை மீறி சோரியாங்குப்பம் பகுதியில் டிராக்டர் மூலம் மணல் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த பெருமாள் (55), சீனிவாசன் (59), நாராயணன் (55), முருகையன் (50), மற்றும் ஆறுமுகம் (67) ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் மணல் எடுக்கப்பட்ட இடம் தனிப்பட்ட சொத்தாக கூறியதையடுத்து, தாசில்தார் உத்தரவின் பேரில் வி.ஏ.ஓ மற்றும் சர்வேயர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது.

இதையடுத்து, மணல் திருட்டில் ஈடுபட்ட 5 பேரையும் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்து, பாகூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *