புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: 5 வயதுக்குட்பட்ட 74,698 குழந்தைகள் பயனடைவார்கள்

புதுவை : சிறு வயது குழந்தைகளை பாதிக்கக்கூடிய போலியோ நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், இந்திய அரசு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்களை நடத்தி வருகிறது. உலகில் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் போலியோ நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம், வரும் 21.12.2025 அன்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. அன்று காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை, 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 74,698 குழந்தைகள் பயனடைவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மொத்தம் 425 முகாம்கள் அமைக்கப்படுகின்றன. அதேபோல், பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், பூங்காக்கள், கோவில்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட 31 முக்கிய இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

உடல் ஊனத்தை ஏற்படுத்தக்கூடிய போலியோ நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க, பெற்றோர்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *