புதுச்சேரியில் பள்ளிகள் அருகில் ரெஸ்டோ பார் திறப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!
புதுச்சேரி நகர்ப்பகுதியில் அரசு பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதியில் புதிதாக ரெஸ்டோ பார் ஒன்று திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உருளையான்பேட்டை தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர் சாலையில் குடியிருப்பு மற்றும் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே புதியதாக ரெஸ்டோ பார் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய ரெஸ்டோ பாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக மூட வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், மேலும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நேரு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கலால்துறையின் தாசில்தார் ராஜேஷ்கன்னா சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ரெஸ்டோ பார் இயங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தை தொடர்ந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

