புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் A.K.சாய் சரவணன் குமார் கருத்துக்கு எதிராக JAACT அமைப்பினர் மனு

புதுச்சேரி யூனியன் பிரதேச காவல்துறை குறித்து சட்டமன்ற உறுப்பினராக உள்ள A.K. சாய் சரவணன் குமார் தெரிவித்த கருத்துக்கு எதிராக, “காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி (JAACT)” அமைப்பினர் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.

அமைப்பினர் தெரிவித்ததாவது: “7.10.2025 அன்று புதுச்சேரி சட்டமன்றத்தில் பேசியபோது, காவல்துறை சில நேரங்களில் சட்டத்திற்குப்புறம்பாக ‘என்கவுண்டர் (extra judicial killing)’ செய்ய வேண்டி வரும் என சாய் சரவணன் குமார்கூறியிருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. இத்தகைய கருத்துகள் காவல் துறையினருக்கு தவறான ஊக்கத்தை அளிக்கும் வகையில் உள்ளது,” என கூறினர்.

மேலும், “சட்டமன்ற உறுப்பினர் என்ற பொறுப்பில் இருப்பவர் இவ்வகையான கருத்துகளைத் தெரிவிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மனித உரிமை மதிப்புகளுக்கும் முரணானது. காவல் சித்திரவதை, என்கவுண்டர் எனப்படும் சட்டவிரோதக் கொலைகளைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றும் அவர்கள் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இம்மனு புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலாளர், முதலமைச்சர், காவல்துறை இயக்குநர் மற்றும் காவல் துறை ஆய்வாளர் அலுவலகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக JAACT அமைப்பினர் தெரிவித்தனர்.

அத்துடன், எதிர்காலத்தில் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பையும், மனித உரிமை நிலைப்பாடுகளையும் உறுதி செய்யும் வகையில் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *