புதுச்சேரி பொதுப்பணித்துறை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரியில் கடந்த 2016-ஆம் ஆண்டு பொதுப்பணித்துறையில் (PWD) 2,642 பேர் தற்காலிக அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இவர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர், பணிநீக்கம் செய்யப்பட்ட இந்த ஊழியர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக மீண்டும் பணி வழங்கக் கோரி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், முதலமைச்சர் ரங்கசாமி, பணிநீக்கம் செய்யப்பட்ட 2,642 பேருக்கும் மீண்டும் பணி வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். எனினும், அந்த அறிவிப்பு இதுவரை நடைமுறையில் அமலாகாத நிலையில், ஊழியர்கள் மீண்டும் தெருக்களில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இன்று புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், பணிநீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் தெய்வீகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “எங்கள் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்”, “முதல்வரின் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்” என்று கோஷங்கள் எழுப்பினர்.
அவர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக ஏற்று, மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் இந்த பிரச்சனைக்கு அரசு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.