புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடைபெற்ற காவல் துறை நடவடிக்கைக்கு எதிராக JCM மக்கள் மன்றம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
காலாப்பட்டு காவல் நிலையம் முன், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் தலைமையில் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
கடந்த சில நாட்களாக பல்கலைக்கழகத்தில் பாலியல் புகார்கள் குறித்து விவாதம் நிலவி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் வளாகத்தில் போராட்டம் நடத்தியபோது, நள்ளிரவில் காவல்துறையினர் தடியடி நடத்தி பலரை கைது செய்ததாக கூறப்படுகிறது.
“மாணவர்களின் கோரிக்கை எளிமையானது — பாலியல் புகார்கள் குறித்து விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்பதே. ஆனால் எந்த குற்றமும் இல்லாத மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இது அநியாயம்,” என ரீகன் ஜான்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், காவல்துறையினர் மாணவர்களுக்கு மீது தவறான வழக்கு பதிவு செய்ய முயற்சி செய்கிறார்கள் எனவும், உண்மையான குற்றவாளிகள் சுதந்திரமாக திரிகிறார்கள் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
போராட்டத்துக்கு முன், மக்கள் மன்ற நிர்வாகிகள் காலாப்பட்டு காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளருடன் சந்தித்து, கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க கோரிக்கை மனுவும் வழங்கினர்.