புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்கம் குற்றச்சாட்டு
புதுச்சேரி : புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச் சங்கத்தின் தலைவர் மோகன், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் முறையாக வழங்கப்படவில்லை என அரசை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என பலமுறை முதலமைச்சரை சந்தித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், தொகுதி வாரியாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முதலமைச்சரை சந்தித்து வேண்டப்பட்ட சிலருக்கு மட்டும் இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டு வருவதாகவும், முன்னாள் ராணுவ வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும் வேலைவாய்ப்பு தொடர்பாக, கடந்த காலங்களில் எல்.டி.சி., யு.டி.சி. பணியிடங்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு (ரிசர்வேஷன்) இந்த முறை முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், காவலர் பணியிலும் பதவி உயர்வு (ப்ரமோஷன்) வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
கடந்த 25 ஆண்டுகளாக முன்னாள் ராணுவ வீரர்களுக்கென இந்த அரசு எந்த புதிய திட்டங்களையும், சலுகைகளையும் செயல்படுத்தவில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு ஆண்டும் முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் நல வாரியம் மூலம் கொடி நாள் நிதியிலிருந்து, 60 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அனைத்து விதவைத் தாய்மார்களுக்கும் தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக ரூ.5,000 பண்டிகை உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2024ம் ஆண்டு வரை தகுதி பெற்ற அனைவருக்கும் தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே இந்த தொகை வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக பலருக்கு வழங்கப்பட்டாலும், இன்றுவரை சுமார் 70 பேருக்கு உதவித் தொகை வழங்கப்படவில்லை என்றும், முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு விடுபட்ட அனைவருக்கும் பண்டிகை உதவித் தொகையை விரைவில் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், கொடிநாள் நிதி விழாவையும் முன்னாள் ராணுவ வீரர்களை இணைத்து நடத்தாமல் அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினார். முன்னாள் ராணுவ வீரர்களுக்கென தனி அமைச்சர் இருந்தும், அந்த அமைச்சர் எங்கள் அலுவலகம் எங்கு உள்ளது என்பதே தெரியாது என்றும், இதுவரை ஒருமுறை கூட அலுவலகத்திற்கு வந்து பார்வையிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல், முன்னாள் ராணுவ வீரர்களை அழைத்து நேரில் பேசுவதற்கும் அரசு முன்வரவில்லை எனவும் வேதனையுடன் கூறினார்.
வரும் தேர்தலை கருத்தில் கொண்டு முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கைகளுக்கு அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என்றால், தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து சங்க உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள் என்றும், புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச் சங்கம் தலைவர் மோகன் எச்சரிக்கை விடுத்தார்.

