பழமையான குபேர் அங்காடி இடிப்பு வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

புதுச்சேரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க குபேர் அங்காடி இடிப்பு தொடர்பான வழக்கில், நகராட்சி ஆணையர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள குபேர் அங்காடி, 1826ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழமையான சந்தையாகும். தற்போது காய்கறி, பூ, மீன் மற்றும் மளிகை உள்ளிட்ட 1400க்கும் மேற்பட்ட கடைகள் இங்கு செயல்பட்டு வருகின்றன.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பழைய கட்டிடத்தை இடித்து மூன்று அடுக்குகள் கொண்ட புதிய மார்க்கெட்டை கட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, வியாபாரிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திட்டம் நீண்டகாலமாக நிறுத்தப்பட்டது. பின்னர் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது.
இந்நிலையில், லாஸ்பேட்டை தாகூர் நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் கோபால், பழைய மார்க்கெட்டை இடிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கின் போது தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மார்க்கெட்டை ஆய்வு செய்தபின், கட்டிடம் பொது பயன்பாட்டுக்கு பாதுகாப்பானது அல்ல என்றும், இடிக்க பரிந்துரைத்தது என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த அறிக்கை வெளியாகி இரண்டாண்டுகள் கடந்த நிலையில், இன்னும் இடிப்பு நடவடிக்கை தொடங்கப்படவில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது.
பாழடைந்த கட்டிடத்தின் கூரை, சுவர் இடிந்து மனித உயிர் மற்றும் சொத்து சேதம் ஏற்படாமல் தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க நான்கு வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இடிப்பு நடவடிக்கைகளை சரியான முறையில் திட்டமிட பொதுப்பணித்துறை உதவியை நாடலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
புதுச்சேரி நகராட்சி ஆணையர், நிதி திருப்பி அனுப்பப்பட்டதின் காரணம் மற்றும் புதிய மார்க்கெட் திட்டம் கைவிடப்பட்டதற்கான விவரங்களுடன் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.