கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்கள் கைது – போலீசாரை பார்த்து ஓடும் போது ஒருவர் கை முறிவு
விழுப்புரம் மற்றும் புதுச்சேரியை இணைக்கும் மயிலம் சாலை பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெறும் தகவல் கிடைத்ததை அடுத்து, சேத்தராப்பட்டு போலீசார் நடத்திய வாகன சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சேத்தராப்பட்டு பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் புதுச்சேரி–மயிலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர்.
ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் வாகனத்தை நிறுத்தாமல் கீழே போட்டுவிட்டு, கையில் இருந்த பையுடன் ஓடிவிட்டனர். உடனே போலீசார் துரத்திச் சென்று இருவரையும் மடக்கிப் பிடித்தனர். பையை சோதனையிட்ட போது அதில் ஒரு கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஓடும் போது கீழே விழுந்த ஒருவன் கை முறிவு அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர்கள் விழுப்புரம் மாவட்டம் மணவள்ளியைச் சேர்ந்த பாரத், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த அமீர் கான் என்பதும், பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய கஞ்சாவை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா, இரண்டு செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட வாலிபர்கள் இனி தவறான செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று உறுதியளிக்கும் வகையில் அவர்களிடம் இருந்து ஒரு விழிப்புணர்வு வீடியோவையும் போலீசார் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

