தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி சண்டே மார்க்கெட்டில் மக்கள் கூட்டம்!

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, புதுச்சேரி நகரில் உள்ள நேரு வீதி மற்றும் காந்தி வீதி பகுதிகளில் நடைபெற்ற சண்டே மார்க்கெட்டில் நேற்று மக்கள் திரளாகக் குவிந்தனர்.புதுச்சேரியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சண்டே மார்க்கெட்டில் வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் ஆடை, மின்சாதனங்கள், அலங்காரப் பொருட்கள் வரை பல்வேறு வகையான அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
நகரின் முக்கிய சாலைகளான காந்தி வீதி மற்றும் நேரு வீதியின் இருபுறங்களிலும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு ஒருநாள் வியாபாரம் நடைபெற்றது. குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதால், உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளி ஷாப்பிங்கிற்காக அதிக அளவில் வந்தனர்.
இதனால், மார்க்கெட்டில் பெரும் நெரிசல் நிலவியது. மக்கள் நெரிசலை கருத்தில் கொண்டு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. காந்தி வீதி மற்றும் நேரு வீதிகளில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் கடுமையான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், வரும் வாரங்களில் மேலும் அதிகமான மக்கள் சண்டே மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்ய வருவார்கள் என வியாபாரிகள் தெரிவித்தனர்.