புதுச்சேரியில் சாலை விபத்தில் ஊழியர் பலி!

புதுச்சேரி பத்துக்கண்ணு அருகே செங்கல் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த மினி லாரி, எதிரே வந்த இருசக்கர வாகனத்தை மோதியதில் தனியார் தொழிற்சாலை மேலாளர் ராஜா (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வளவனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா, புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உற்பத்தி மேலாளராக பணியாற்றி வந்தார். திருமணமாகி மூன்று மாத பெண் குழந்தைக்கு தந்தையான அவர், பணி காரணமாக புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
லாரி ஓட்டுனர் விபத்துக்குப் பின் தப்பி சென்ற நிலையில், வில்லியனூர் போக்குவரத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அப்பகுதி மக்கள், அடிக்கடி விபத்துகள் நடைபெறும் அந்தச் சாலையில் வேகத்தடைகள் அமைக்கவும், காலை நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹெல்மெட் அணிந்திருந்தும் தலை நசுங்கி உயிரிழந்த ராஜாவின் மரணம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.