புதுச்சேரியில் தொடர் செயின் பறிப்பு – மகாராஷ்டிரா கொள்ளையன் உள்ளிட்ட 3 பேர் கைது!

புதுச்சேரி : புதுச்சேரி முழுவதும் பெண்களிடம் தொடர் செயின் பறிப்பு வழக்கில் ஈடுபட்ட மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வழிப்பறி கொள்ளையன் உட்பட மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
முதலியார்பேட்டை, ஜான்பால் நகர், மூலக்குளம் பகுதிகளில் கடந்த சில நாட்களில் மூன்று பெண்களிடம் தங்கச் செயின்கள் பறிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், பி.ஒய்–01–சிடி–6689 என்ற எண்ணிலான பைக்கில் ஒரே நபர் மூன்றும் இடங்களிலும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அந்த பைக் புதுச்சேரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீசார், தொடர்ந்து கண்காணித்து வந்தனர். பின்னர், பைக்கை எடுத்த நபரை கைதுசெய்தனர். விசாரணையில் அவர் மகாராஷ்டிரா மாநிலம் பர்பானியைச் சேர்ந்த அமோல் (33) எனவும், தமிழகம், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட செயின் பறிப்புகளில் ஈடுபட்டவராகவும் தெரியவந்தது.
அமோல், சமீபத்தில் புழல் சிறையிலிருந்து வெளிவந்தவர் எனவும், தனது நண்பர் ஷாகுல் ஹமீது (36) வழியாக பைக் வாங்கி, புதுச்சேரிக்கு வந்து செயின் பறிப்பு செய்ததும், பறித்த நகைகளை வியாசர்பாடியில் அடகு கடை நடத்தும் மூர்த்தி (52) என்பவரிடம் விற்றதும் விசாரணையில் வெளிச்சமிட்டது.
போலீசார் மூவரையும் கைது செய்து, 23 கிராம் தங்கம், ரூ.55,000 ரொக்கம், மூன்று மொபைல்கள் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கை விரைந்து முடித்த தனிப்படை போலீசாரை எஸ்.எஸ்.பி. பாராட்டினார்.