புதுச்சேரியில் தண்ணீர் கேனில் கரப்பான் பூச்சி!

புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு விநியோகம் செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேன்களில் கரப்பான் பூச்சி மிதக்கும் காட்சி கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் இருந்து, டீலர்கள் மூலம் புதுச்சேரி முழுவதும் தண்ணீர் கேன்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. அதன்படி, லெனின் வீதியில் உள்ள விஷ்ணு டிரிங்கிங் வாட்டர் சப்ளை நிறுவனம் இன்று கார்த்திக் காந்தி என்பவரது நிறுவனத்திற்கு தண்ணீர் கேன்கள் வழங்கியது.
அந்த கேன்களில் ஒன்றில் கரப்பான் பூச்சி மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திக், விநியோகம் செய்த டீலரிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் பொறுப்பற்ற முறையில் பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த கார்த்திக், சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஏற்கனவே புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் விஷயத்தில் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் கரப்பான் பூச்சி மிதந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.