புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக, தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “இது என் லிமிட்… நான்தான் எம்எல்ஏ… உங்களை தொலைத்து விடுவேன். போலீஸ் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்… குற்றவாளிகளுக்கு ராஜமரியாதை தருகிறீர்கள், மாணவர்களை மிதிக்கிறீர்கள்” என கடுமையாக எச்சரிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
இதற்குமுன், காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது நிகழ்ந்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மாணவர்கள் துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நீண்டதால், போலீசார் நள்ளிரவில் மாணவர்களை தடியடி நடத்தி கைது செய்தனர்.
இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக மாணவர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தற்போது மாணவர்களை ஆதரித்து எம்எல்ஏ கல்யாணசுந்தரத்தின் திடீர் நடவடிக்கை அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.