புதுச்சேரியில் பட்டப்பகலில் ரவுடி முகத்தை வெட்டிய மர்ம நபர்கள்! 4 பேர் கைது!
புதுச்சேரியில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ரவுடியை ஓட ஓட விரட்டி காவல் நிலைய வாசலில் வைத்து சரமாரியாக வெட்டியதில் முகம் சிதைந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 4பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஜாக்(எ) ஜாக்பால்(23), இவர் மீது கொலை,கொலை முயற்சி,அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.இந்நிலையில் ரவுடி ஜாக்பால் நேற்று இரவு லாஸ்பேட்டை புற காவல் நிலையம் எதிரே உள்ள சமுதாய நலக்கூடத்தில் தனது நண்பரின் மகள் பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை கவனித்து விட்டு வெளியே வந்து
புறக்காவல் நிலையம் வாசலில் நின்றிருந்த காவல்துறை அதிகாரியிடம் பேசிவிட்டு, வீட்டிற்கு புறப்பட்டப்போது, அங்கு மறைந்திருந்த மரம் கும்பல் திடீரென வீச்சரிவாளுடன் ஜாக்பாலை மடக்கி வெட்ட முயன்றனர். ஆனால் ஜாக்பால் அவர்களிடமிருந்து தப்பி காவல் நிலையத்திற்குள் ஓட முயன்றார். ஆனால் அதற்குள் அந்த கும்பல் ஜாக்பாலை, காவல் நிலைய வாசலிலேயே மடக்கி முகம் மற்றும் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதனிடையே ரத்த வெள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில் உயிருக்கு போராடிய ஜாக்பாலை மீட்ட லாஸ்பேட்டை போலீசார் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து லாஸ்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சண்முகாபுரம் பகுதியை சேர்ந்த மெக்கானிக் எலி (எ) தினகரன் மற்றும் அவரது நண்பர் பச்சையப்பன் ஆகியோர் கடந்த மே மாதம் காதல் விவகாரத்தில் ரவுடி ஜாக்பால் ஆதரவாளர்களான இரண்டு சிறுவர்களை தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜாக்பால் சமாதானம் பேசுவதாக கூறி தினகரன் மற்றும் பச்சையப்பனை மீனாட்சிபேட்டை பகுதிக்கு அழைத்துச் சென்று சராமாரியாக வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தனர். இந்த வழக்கில் ரவுடி ஜாக்பால் உள்ளிட்ட 10 பேர் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்த நிலையில், மீண்டும் பச்சையப்பனை கொலை செய்து விடுவதாக ஜாக்பால் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பச்சையப்பன் தனது நண்பரான முகிலன் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து பழிக்கு பழியாக ஜாக்பாலை கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து தமிழக பகுதிக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்த பச்சையப்பன், முகிலன் மற்றும் விஷ்வா பரத் ஆகியோரை சிறப்பு அதிரடிப்படை உதவியுடன் போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய சந்துரு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் காவல் நிலைய வாசலிலேயே ரவுடியை சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

