புதுச்சேரியில் வண்ணமயமான அலங்காரப் பொருட்கள் விற்பனை களைகட்டல்…
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ், வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இந்நாளை, கிறிஸ்தவர்கள் தங்களது இல்லங்களில் குடில் அமைத்து, இயேசு சொரூபத்தை வைத்து வெகு விமரிசையாகக் கொண்டாடுவர்.
இதற்காக வீடுகளில் ஸ்டார், குடில், கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட அலங்காரங்களை அமைத்து அழகுபடுத்துவது வழக்கம். அந்த வகையில், புதுச்சேரியில் விதவிதமான வண்ணங்களிலும் புதிய வடிவங்களிலும் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
அதேபோல், கிறிஸ்துமஸ் மரம், குடில் அமைப்பதற்கு தேவையான பொருட்கள், குழந்தைகளை கவரும் வகையிலான கிறிஸ்துமஸ் தாத்தா உடைகள், பலவிதமான அலங்கார விளக்குகளும் பல நிறங்களிலும் புதிய வடிவங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
மேலும், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்த வண்ணமயமான கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள், கிறிஸ்துமஸ் மரங்கள் முன்பு நின்று செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
இந்த ஆண்டு இத்தாலி மற்றும் சீன தயாரிப்புகளான புதிய வகை குடில் செட்களும் விற்பனைக்கு வந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ரூ.500 முதல் ரூ.25,000 வரை விலை கொண்ட குடில் செட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இதுகுறித்து விற்பனையாளர்கள் மேலும் தெரிவிக்கையில், தொடர்ந்து பெய்த மழையால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மழை காரணமாக வியாபாரம் பெரிதும் பாதிப்படைந்ததாகவும் தெரிவித்தனர்.

