புதுச்சேரியில் 1986ல் தொடங்கப்பட்ட பாசிக் நிறுவனம் மூடல்!

புதுச்சேரி அரசின் வேளாண் சேவை மற்றும் தொழில் கார்ப்பரேஷன் (பாசிக்) நிறுவனம் 1986ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேளாண் இடுபொருட்கள், விதைகள், செடிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் போன்ற துறைகளில் பாசிக் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
2006–07 வரை லாபகரமாக இயங்கிய நிறுவனம் பின்னர் நஷ்டத்தை சந்தித்து வந்தது. 2007–08ஆம் ஆண்டில் ரூ.85 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது நிறுவனம் சுமார் ரூ.50 கோடி நஷ்டத்தில் உள்ளது.
சுமார் 300 பேருக்கு வேலை வழங்க வேண்டிய நிலையில், 900 பேர் பணியில் சேர்க்கப்பட்டதால் சம்பளச் செலவுகள் அதிகரித்து, நிதி சிக்கல் ஏற்பட்டது. சம்பளம் வழங்க கோரி ஊழியர்கள் வழக்கு தொடர, ஐகோர்ட் சம்பளம் வழங்க உத்தரவிட்டது. ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக அதையும் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, பாசிக் நிறுவனத்தை வரும் டிசம்பர் 15க்குள் மூடும் திட்டம் அரசால் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தொழிலாளர் துறைக்கு அனுப்பியுள்ளார். தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பாசிக் அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டதைத் தொடர்ந்து, ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து, நிறுவனம் மீண்டும் இயங்குவதற்காக போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.