புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுச்சேரி அரசு தனது ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசில் பணிபுரியும் குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு ரூ.7,000 போனஸ் வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இத்தகவலை புதுச்சேரி அரசின் நிதித்துறை சார்பு செயலர் சிவக்குமார் உத்தரவு வெளியிட்டுள்ளார். இதன் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு கைக்கு கிடைக்கும் தொகை ரூ.6,908 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறைந்தது மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் அரசு பணியில் தொடர்ந்து பணியாற்றியவர்கள் மட்டுமே இந்த போனஸுக்குத் தகுதியானவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. போனஸ் தொகை அந்தந்த துறைகளின் அனுமதிக்கப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்பட வேண்டும் என்றும் நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு அனைத்து துறை செயலர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு நிம்மதி அளிக்கும் விதமாக இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.