புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரியில் பாலியல் சீண்டல் பரபரப்பு – நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் போராட்டம்!
புதுச்சேரி கனகசெட்டிகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பிம்ஸ் (PIMS) மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 10-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தக் கல்லூரியின் செவிலியர் பிரிவில் பயிலும் மாணவிகள் மருத்துவமனைப் பிரிவில் பயிற்சிக்காகச் செல்லும் போது, எக்ஸ்ரே பிரிவில் பணிபுரியும் இரண்டு டெக்னீசியன்கள் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
புகார் கிடைத்ததையடுத்து, கல்லூரியின் உள்ளீட்டு புகார் குழு (Internal Committee) விசாரணை நடத்தியதில் குற்றச்சாட்டு உண்மை என உறுதிப்படுத்தப்பட்டது.
ஆனால் குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மாணவர்களின் கோபத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.
இதையடுத்து, பாலியல் தொல்லைகளை மூடி மறைக்கும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், குற்றம்சாட்டப்பட்ட நபர்களை உடனடியாக பணிநீக்கம் செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு ஆதரவாக சட்டக்கல்லூரி மாணவர்கள், இந்திய மாணவர் சங்கம், மாணவர் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்பினரும் இணைந்ததால், கல்லூரி வளாகம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவுகிறது.
கடந்த சில வாரங்களாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் காரைக்கால் கிளையில் பேராசிரியர்களால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இப்போது மீண்டும் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருப்பது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

