புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை நிர்வாகம் மூடி மறைப்பதாக குற்றம்சாட்டி, பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நள்ளிரவில் போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, காரைக்கால் கிளையில் படிக்கும் மாணவி ஒருவர் அழுதபடி அளித்த ஆடியோ இணையத்தில் வைரலானது. அதில், துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் ஆபாசமாகப் பேசுவதோடு, நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு வற்புறுத்தியதாகவும், மறுத்தால் இன்டெர்னல் மதிப்பெண்களை வழங்கமாட்டேன் என மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து முன்னாள் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க துணைநிலை ஆளுநரிடம் மனு அளித்தார்.
இதேபோல் பல்கலைக்கழகத்தின் மற்றொரு வளாகத்திலும் பேராசிரியர் ஒருவர் ஆராய்ச்சி மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பல்கலைக்கழக மாணவர்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.
இந்த நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கிறது எனக் கூறி, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் போராட்டம் நள்ளிரவும் தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து, காலாப்பட்டு காவல்துறை நள்ளிரவு 2 மணியளவில் வளாகத்துக்குள் நுழைந்து தடியடி நடத்தி, 6 மாணவிகள் உட்பட 24 மாணவர்களை கைது செய்தது.
காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.