புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் கனமழை!

புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பிராந்தியத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், கோயில்கள், பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 9 செ.மீ மழை பதிவாகியுள்ள இந்த பகுதியில், சித்தாராம வீதி, பிள்ளையார் கோயில் வீதி, நீரோடம் வீதி, சிக்காரிய வீதி போன்ற பகுதிகளில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வினாயகர் கோயில் மற்றும் ஏனாம் காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் மழை நீர் புகுந்துள்ளது.
இதனிடையே குரசம்பேட்டா பகுதியில் இடி மின்னல் தாக்கியதில் சூரியநாராயணன் என்பவரின் வீட்டின் தூண் துண்டுதுண்டாக உடைந்து விழுந்து கட்டிடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
மேலும், கல்வி துறையில் நடைபெறும் தேர்வுகள் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படாததால் பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.