புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி!
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. கடந்த முறை போல என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 14 இடங்களிலும் போட்டியிடும் என பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தெரிவித்துள்ளார்.
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி குறித்து மத்திய அமைச்சரும், பாஜக தேர்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா தலைமையில் தனியார் ஹோட்டலில் முதலமைச்சர் ரங்கசாமியுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அமைச்சர் லஷ்மி நாராயணன் இருந்தனர். இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, எங்களது தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியா தலைமையில் முதலமைச்சர் ரங்கசாமியுடன் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். கடந்த தேர்தலில் பாஜக, என்.ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களே இந்த முறையும் ஒதுக்கப்படும் எனவும் என்.ஆர்.காங்கிரசுக்கு 16 இடங்களும், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 14 இடங்களும் ஒதுக்கப்படும் எனவும் எந்த தொகுதிகளில் யார் நிற்பது என்பது குறித்து பின்னர் பேசி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் என்ன கூட்டணி உள்ளதோ, அதே கூட்டணி புதுச்சேரியிலும் தொடரும் எனவும் அதிமுக கடந்த முறை 5 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் இந்த முறை எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.

