புதுவை முதல்வர் ரங்கசாமி தீபாவளி வாழ்த்து!
புதுவை மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து முதல்வர் ரங்கசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பல்வேறு சமூகப் பின்னணிகளை கொண்ட மக்களை ஒன்றிணைத்தல், கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், உள்ளூர் வணிகங்களுக்கு வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை வழங்குதல், ஆன்மிகச் சிந்தனைகளைப் பிரதிபலித்தல் போன்ற உள்ளார்ந்த பண்புகளை இந்தியப் பண்டிகைகள் கொண்டுள்ளன. அத்தகைய பண்டிகைகளில் தீபாவளி முக்கியமான ஒன்றாகும்.
தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படுவதற்கு, இருளை நீக்கி ஒளியும், தீமையை அழித்து நன்மையும், அறியாமையை அகற்றி அறிவும் மேலோங்கும் என்ற ஆழமான நம்பிக்கையே அதன் காரணம் ஆகும். மகிழ்ச்சியையும். வெற்றியையும், செழிப்பையும் தரும் இந்தத் தீபாவளி, மத்தாப்புகளும் பட்டாசுகளும், வாண வேடிக்கைகளும் வானத்தை ஒளிரச் செய்வது போல், உங்கள் அனைவரது வாழ்வையும் மகிழ்ச்சியால் ஒளிரச் செய்யட்டும்.
அனைவரும் பாதுகாப்பாக மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் . இவ்வாறு புதுவை முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

