பாலியல் புகாரில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் – மாணவர்கள் மீது நடவடிக்கை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சு

காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகாருக்கு நியாயமான விசாரணை நடத்த வேண்டுமென மாணவர்கள் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி, கைது செய்து வழக்கு பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது என புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
“மாணவர்கள் தங்கள் உரிமைக்காக அமைதியான முறையில் குரல் கொடுத்துள்ளனர். அவர்களை தாக்கி, வழக்குப்பதிவு செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது. மாணவர்கள்மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேலும், பேராசிரியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார்களை விசாரிக்க சுயாதீனமான மற்றும் நம்பகமான விசாரணைக் குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைக்காக திமுக கட்சி முழுமையாக துணை நிற்கும்,” என்று சிவா எச்சரித்தார்.