பல ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை – புதுச்சேரி அரசு கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், கடந்த 15 ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்கப்படாததை கண்டித்து, தாகூர் கலைக்கல்லூரி வளாகத்தில் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி அரசின் கீழ் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் மொத்தம் 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 350 பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் 2002 முதல் 2018 வரை டெல்லி யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால் இதுவரை, அவர்கள் பதவி உயர்வு பெறாமல், உதவி பேராசிரியர்களாகவே பணியாற்றி வருகின்றனர்.
பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பதவிக்கு உயர்த்தி, அதற்கேற்ப ஊதிய உயர்வும் வழங்கப்பட வேண்டும் என கோரி பல முறை அரசிடம் மனு அளித்தும், பதில் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், 50-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் தற்போது தாகூர் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, மாணவர்கள் வகுப்புகள் பாதிக்காத வகையில் தங்களது போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள் கூறியதாவது:
“நீண்ட ஆண்டுகளாகப் பணியாற்றியும் பதவி உயர்வு வழங்கப்படாதது கடும் அநியாயம். எங்களது நியாயமான கோரிக்கைக்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என தெரிவித்தனர்.

