போலி சைக்கிள் நிறுவன மோசடி – அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! – புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அறிக்கை!
போலி சைக்கிள் நிறுவன மோசடியில் சிக்கிய ஒரு அதிகாரி மட்டுமின்றி பல உயர் அதிகாரிகளும், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாகவும் அவர்கள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “போலி சைக்கிள் நிறுவனத்திடம் 80 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது காவல்துறைக்கு மிகப்பெரிய களங்கத்தையும், தலைகுனிவையும் ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் புதுச்சேரியை தங்கள் களமாக வைத்துக் கொண்டு சட்டவிரோத போதை பொருட்கள் விற்பனை மற்றும் பொருளாதார குற்றங்களை துணிச்சலுடன் செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட நபர்களுக்கு ஒரு சில உள்ளூர் பிரபலங்களும் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவும் இருப்பதால் குற்றங்கள் பெருமளவில் நடைபெற்று வருகிறது.
கடந்த சில வருடங்களாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் புதுச்சேரியை பொருளாதார குற்றம் செய்யும் களமாக ஏற்படுத்திக் கொண்டு சுமார் 700-க்கும் மேற்பட்ட நபர்களிடம் 75 கோடிக்கு மேல் போலி சைக்கிள் நிறுவனம் என்ற பெயரில் மோசடி செய்துள்ளார்.
உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடத்தில் போலீ சைக்கிள் நிறுவனம் நடத்திய மோசடி சம்பந்தமாக குற்றச்சாட்டின் அடிப்படையில் உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டிய உருளையன்ம்பேட்டை காவல் நிலையம் எஃப.ஐ.ஆர் பதிவு செய்யாமல் திட்டமிட்டு தவிர்த்தது.
இந்த வழக்கு காவல்துறையின் உயர் அதிகாரிகளால் சைபர் க்ரைமிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு அதன் அலுவலகத்தை சோதனை செய்ததில் சுமார் 2 கோடி ரூபாய் ரொக்க பணமாக அங்கிருந்து பறிமுதல் செய்தனர். உடனடியாக அந்த இடத்தில் சோதனை செய்திருந்தால் இன்னும் பல கோடி ரூபாய் அங்கிருந்து ரொக்க பணத்தை கைப்பற்றி இருக்க முடியும். இது சம்பந்தமாக கேரளாவை சேர்ந்த நிஷாத் அகமது என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து இந்த வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்வதற்காக புதுச்சேரியில் ஒரு கூட்டமே சிண்டிகேட் அமைத்துக் கொண்டு செயல்பட்டனர்.
கோடிக்கணக்கில் பணம் சம்பந்தமான வழக்கு ஒன்று வந்தாலே அதன் தொடர்ச்சியாக ஊழல் முறைகேடு, லஞ்சம், குற்றவாளிகளுக்கு சலுகை உள்ளிட்டவைகள் தொடர் தொற்று நோய் போல் ஏற்படுவது சகஜமான ஒன்றாக ஆகியுள்ளது.
கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது சம்பந்தமாக அமலாக்கத்துறை விசாரணையில் பல உண்மைகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
போலி நிறுவனத்திடம் ஏமாந்த பொது மக்களின் பணத்தை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட ஒரு சில துறையில் உள்ள சில அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பாக செயல்பட்டது வெட்கக்கேடான செயலாகும்.
தற்போது இந்த வழக்கில் 80 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் மீது மேலதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த முறைகேட்டில் ஒரு சாதாரண இன்ஸ்பெக்டர் மட்டும் இவ்வளவு பெரிய தொகையை லஞ்சமாக பெற்று இருக்க வாய்ப்பு இல்லை. இதன் பின்னணியில் காவல்துறையிலேயே உயர் அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் அல்லது தற்பொழுது குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் துறை இன்ஸ்பெக்டரே நிரபராதியாகவும் இருக்கலாம்.
இந்த குற்றப் பின்னணி சம்பந்தமாக மக்களிடம் பல்வேறு சந்தேகங்கள் காவல்துறையின் மீது எழுகின்றது. எனவே இது சம்பந்தமாக காவல்துறைக்கு பொறுப்பேற்றுள்ள உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் ஒரு விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் இந்த குற்றப் பின்னணி குறித்து துரை ரீதியான உயர்மட்ட, நேர்மையான விசாரணைக்கு டிஜிபி அவர்கள் உத்தரவிட வேண்டும். இதில் நேரடியாக துணைநிலை ஆளுநர் அவர்கள் தலையிட வேண்டும்.
இந்த குற்றப் பின்னணியில் குறிப்பிட்ட ஒரு அதிகாரி மட்டுமல்ல இன்னும் ஒரு சில உயர் அதிகாரிகளும் மேலும் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருக்கக்கூடிய சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கின்றது. அவர்கள் மீதும் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.

