போலி மருந்து விவகாரத்தில் சிபிஐ விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரும் – ஜோஸ் சார்லஸ் மார்டின்

புதுச்சேரி:
போலி மருந்து விவகாரத்தில் எத்தனை SIT குழுக்கள் அமைத்தாலும், முழுமையான வெளிப்படைத்தன்மை கிடைக்காது என்றும், சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார்.

புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நடிகர் விஜய் புதுச்சேரி குறித்து புரிதல் இல்லாமல் கருத்து தெரிவித்துள்ளார் என விமர்சனம் செய்தார். புதுச்சேரியைப் பற்றி தெளிவான புரிதல் இல்லாத நிலையில், அவருடன் கூட்டணி குறித்து அவசரமாக முடிவு எடுக்க முடியாது என்றும், அவரை வழிநடத்துபவர்கள் சரியாக இல்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும், அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பதால், கூட்டணி குறித்து தற்போது எந்த முடிவையும் அறிவிக்க முடியாது என தெரிவித்தார்.

வரவிருக்கும் தேர்தலில் புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் லட்சிய ஜனநாயக கட்சி போட்டியிடும் என்றும், கூட்டணி குறித்து திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறினார். புதுச்சேரி 30 தொகுதிகளைக் கொண்ட மாநிலமாக இருப்பதால், இதுபோன்ற சிறிய மாநிலத்தை ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்றுவது சுலபம் என்றும், பெரிய மாநிலங்களைப் போல அல்லாமல், புதுச்சேரியை விரைவில் முன்னேற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, புதுச்சேரிக்கு வருகையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மகளிர் முன்னேற்றம், உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள், கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு ஆகியவையே கட்சியின் முதன்மை கொள்கைகள் என விளக்கினார். அனைவரும் சமம் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே மும்மத பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாதுகாப்புக்கும் பந்தாவுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் தன்னை விமர்சனம் செய்துள்ளார் என குற்றம்சாட்டிய ஜோஸ் சார்லஸ் மார்டின், புதுச்சேரியில் தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருவதால் மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். தற்போதைய சூழலில், புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்தை விட, சிறப்பு மாநில அந்தஸ்தே அவசியம் என்றும் அவர் கூறினார்.

லட்சிய ஜனநாயக கட்சியில் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு, இளைஞர்கள், மாற்றுக் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், அதற்கு அவர்கள் சமூக சேவை உணர்வுடன் சித்தமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தனது அரசியல் முன்மாதிரியாக எம்.ஜி.ஆர். இருப்பதாகவும், அவரின் பாதிப்பால்தான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் உருவானதாகவும் அவர் கூறினார்.

குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வரவில்லை. உலகிற்கே முன்மாதிரியாக புதுச்சேரியை மாற்ற வேண்டும். புதுச்சேரி உலகின் சிறந்த நகரமாக மாற வேண்டும்” என ஜோஸ் சார்லஸ் மார்டின் தனது உரையை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *