மேலும் 2 மேம்பாலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்!

புதுச்சேரியில் மேலும் இரண்டு மேம்பாலங்கள் கட்ட மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என ஆளுநர் கைலாஷ்நாதன் வலியுறுத்தியுள்ளார்.
புதுவையில் ரூ.436 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் கைலாஷ்நாதன்,
“நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை, பாலம், துறைமுகம், ரயில், விமான நிலையம் போன்ற உள்கட்டமைப்புகள்தான் நரம்பு மண்டலமாக உள்ளன. மக்கள் தொகை, வாகன எண்ணிக்கை, நகர வளர்ச்சி, தொழிற்சாலைகள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க மேம்பாலங்கள் அவசியம்,” என கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் நாடு வேகமான வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் “சரியான திட்டமிடல் – விரைவான செயல்பாடு – தொடர்ச்சியான கண்காணிப்பு” என்ற தாரக மந்திரம் காரணமாக இந்தியா உலகில் கவனம் பெறும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதுடன், பசுமை வளர்ச்சிக்கான Green Highways Project மூலம் சோலார் விளக்குகள், மழைநீர் சேமிப்பு போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
புதுவை–சென்னை கிழக்கு கடற்கரை சாலை மேம்படுத்தப்பட்டதால் பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும் எனவும் கூறினார்.
புதுவையில் நாள்தோறும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ரூ.436 கோடி மதிப்பில் கட்டப்படும் உயர்மட்ட மேம்பாலம் பெரும் தீர்வாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்திராகாந்தி சதுக்கம் முதல் மரப்பாலம் வரை, மற்றும் அரியாங்குப்பம் முதல் முள்ளோடை வரை இரண்டு புதிய மேம்பாலங்கள் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என ஆளுநர் கைலாஷ்நாதன் வலியுறுத்தினார்.