புதுவை சட்டப்பேரவைக்கு போலீஸ் பாதுகாப்பு !
புதுச்சேரியில் தொடர் போராட்டம் காரணமாக சட்டப்பேரவை வளாகத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
புதுச்சேரியில் ஆளும் என். ஆர். காங்கிரஸ், பாஜக அரசு கடந்த தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்தது, அதுமட்டுமின்றி தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது வாரிசுதாரர்களுக்கு வேலை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.
இதனிடையே அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்னும் தேர்தலை சந்திக்க சில மாதங்களே உள்ளதால் அறிவித்த வாக்குறுதிகள் மட்டும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவித்த அறிவிப்புகளை ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பாஜக அரசானது நிறைவேற்ற முயற்சிகள் எடுத்து வருகிறது.
அதன்படி காலி பணியிடங்களை நிரப்ப தற்பொழுது முடிவு செய்யப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், வாரிசுதாரர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வாரிசுதாரர்கள் சங்கம் சார்பில் சட்டப்பேரவை அருகே இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் ஒன்று கூடினார்கள்.
இதே போல் புதுச்சேரியில் தொடர்ந்து ஆளும் அரசை கண்டித்தும், பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதன்படி வழக்கத்தை விட அதிகப்படியான சட்டப்பேரவை காவலர்கள் மற்றும் பெரியகடை காவல் நிலைய போலீசார் தற்பொழுது கூடுதல் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சட்டப்பேரவைக்குள் செல்லும் பொது மக்களை முழு சோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கின்றனர். மேலும் சட்டப்பேரவை வளாகம் அருகே பேரிக்கார்டுகள் அமைக்கப்பட்டு போராட்ட நோக்கத்தோடு உள்ளே செல்பவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

