சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க சிஎஸ்கே பெரிய முடிவு எடுக்கத் தயாரா?
ஐபிஎல் 2026 ஏலம் நெருங்கி வரும் நிலையில், டிரேடிங் தொடர்பான செய்திகள் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில் முக்கியமாக பேசப்படுவது — ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள்.
சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியை விட்டு வெளியேற விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தல தோனிக்குப் பிந்தைய திறமையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேடி வரும் சிஎஸ்கே நிர்வாகம், அவரை அணியில் சேர்க்க ஆவலுடன் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
சஞ்சு சாம்சன், ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன், திறமையான விக்கெட் கீப்பர், திறமையான கேப்டன் என பன்முக திறமை கொண்டவர் என்பதால், அவர் சிஎஸ்கேவுக்கு சரியான தேர்வாகக் கருதப்படுகிறார்.
ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணி, தங்கள் கேப்டனை விடுவிக்கும்போது அதற்கேற்ற பெரிய வீரரை எதிர்பார்க்கும். அதற்காக, சிஎஸ்கே சில முக்கிய வீரர்களின் பெயர்களை டிரேடிங் பட்டியலில் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில், ஜடேஜாவை டிரேடிங் மூலம் ராஜஸ்தான் அணிக்கு அனுப்பலாம் என பேசப்பட்டது. ஆனால், மூன்று துறைகளிலும் சிறந்து விளங்கும் ஜடேஜாவை விட சிஎஸ்கே நிர்வாகம் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சஞ்சு சாம்சன் டிரேடிங்கில், துபேயின் பெயர் மிகுந்த முக்கியத்துவத்துடன் பேசப்படுகிறது. அதிரடியாக ரன்கள் சேர்க்கும் திறனும், தேவையான சமயங்களில் விக்கெட்டுகளைப் பெறும் திறனும் கொண்ட துபே, ராஜஸ்தான் அணிக்கு ஒரு நல்ல சேர்க்கையாக இருப்பார். மேலும், அவர் முன்பு ராஜஸ்தான் அணிக்காகவே விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சிஎஸ்கே கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்டையும் ராஜஸ்தான் அணி கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தனது கேப்டனை விட்டுக்கொடுக்க சிஎஸ்கே தயங்கியுள்ளது.
சிஎஸ்கே மட்டுமல்லாமல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளும் சஞ்சு சாம்சனை தங்கள் அணிக்கு சேர்க்க முயற்சி செய்து வருகின்றன. இதனால் டிரேடிங் போட்டி மேலும் தீவிரமாகியுள்ளது.
சிஎஸ்கே நிர்வாகம், ராஜஸ்தான் அணியுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதுடன், ஒரு முக்கிய வீரரை டிரேடிங்கிற்காக விடத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான இறுதி முடிவு நவம்பர் 10 அல்லது 11 ஆம் தேதியளவில் தோனி, சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஆகியோர் கலந்துரையாடிய பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

