நிதிஷ் ரெட்டியை கழட்டிவிட்ட கம்பீர்… பிளேயிங் லெவனில் இவருக்கும் இடமில்லை
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை (நவம்பர் 14) கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்க அணியை டெம்பா பவுமா தலைமையேற்கிறார்.
இந்நிலையில், சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஈடன் கார்டன்ஸில் டெஸ்ட் ஆட உள்ளது. கடைசியாக 2019ஆம் ஆண்டு இங்கு வங்கதேசத்துக்கு எதிராக பிங்க் பால் டெஸ்ட் ஆடி வெற்றி பெற்றது. ரெட் பால் டெஸ்ட் பார்த்தால், 2017இல் இலங்கைக்கு எதிராக இங்கு விளையாடியது – அந்தப் போட்டி டிராவில் முடிந்தது.
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி முதல் டெஸ்ட் போட்டி ஸ்குவாடிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். உடற்தகுதியுடன் இருந்தாலும், அவர் தற்போது இந்தியா ஏ அணியில் இடம் பெற்றுள்ளார். இன்று தொடங்கும் இந்தியா ஏ vs தென்னாப்பிரிக்கா ஏ ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்கவுள்ளார். இந்த தொடர் நவம்பர் 19இல் முடிந்ததும், ரெட்டி 2வது டெஸ்ட் (நவம்பர் 22, கவுகாத்தி) ஸ்குவாடில் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், முதல் டெஸ்டில் துருவ் ஜூரேல் விக்கெட் கீப்பராக விளையாடுவது உறுதியாகியுள்ளது. சமீபத்திய டெஸ்ட்களிலும், உள்நாட்டு போட்டிகளிலும் அவர் சிறப்பாக ஆடியுள்ளார் – கடந்த 5 இன்னிங்ஸில் 3 சதங்கள், அதிலும் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்து கவனம் ஈர்த்துள்ளார்.
நிதிஷ் ரெட்டி பந்துவீச்சில் பெரிய தாக்கம் செலுத்தவில்லை என்பதால், அவருக்குப் பதிலாக ஒரு சிறந்த பேட்டருக்கே வாய்ப்பு அளித்துள்ளது.
ஈடன் கார்டன்ஸ் மைதானம் வழக்கமாக சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றது என சொல்லப்பட்டாலும், கடந்த 15 ஆண்டுகளில் நடைபெற்ற 6 ரெட் பால் டெஸ்ட்களில் 61% விக்கெட்டுகளை வேகப்பந்துவீச்சாளர்களே கைப்பற்றியுள்ளனர் (மொத்தம் 97 விக்கெட்டுகள்).
இந்த முறை மைதானம் கருப்பு மண் ஆடுகளம் என்பதால், ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு சாதகமான சூழல் உருவாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் போன்ற பந்துவீச்சாளர்களை ஆட்டக்கட்டில் சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
மேலும், மேகமூட்டமான வானிலை காரணமாக காலையும் மாலையும் பந்து சிறப்பாக ஸ்வீங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே வேகப்பந்து ஆட்டக்காரர்களுக்கு முக்கிய பங்கு இருக்கும்.
மைதானம் இறுதிநாளில் தேய்மானம் அடைந்து சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதாக மாறும். அதற்கு ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருப்பதே போதுமானதாக கருதப்படுகிறது. இன்னும் நீண்ட பேட்டிங் ஆடர் தேவைப்பட்டால், ஆகாஷ் தீப்புக்குப் பதிலாக அக்சர் பட்டேல் சேர்க்கப்படலாம்.
ஆனால் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு குறைவு என வல்லுநர்கள் கூறுகின்றனர். போட்டி நடைபெறும் முதல் நாளில் மைதானத்தின் தன்மையைப் பொறுத்து, கம்பீர் – கில் கூட்டணி தங்களின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

