வாங்கிய கடனுக்கு பதில் அளிக்காத ரவி மோகன்… வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்…

நடிகர் ரவி மோகனின் ஈசிஆர் சொகுசு பங்களா வீட்டிற்கு வாங்கிய கடனை முறையாக செலுத்தாததால் தனியார் வங்கி அதிகாரிகள் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
சென்னை ஈசிஆர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரவி மோகனின் சொகுசு பங்களா வீட்டை (ICICI BANK) தனியார் வாங்கி கடனில் வாங்கியுள்ளார். கடந்த 11 மாதங்களாக கடன் தொகையை ரவி மோகன் செலுத்தாததால் வங்கி நிர்வாகம் சார்பில் மூன்று அதிகாரிகள் ரவி மோகன் வீட்டில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டினர்.
ரவி மோகன் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் “டச் கோல்ட் யுனிவர்சல்” என்ற தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த தயாரிப்பு நிறுவனத்துடன் ரவி மோகன் கடந்த 2024 செப்டம்பரில் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், முதல் படத்திற்காக அவருக்கு முன்பணமாக ரூபாய் 6 கோடி வழங்கப்பட்டதாகவும், ஆனால் ரவி மோகன் அந்த நிறுவனத்தின் படத்தில் நடிக்காமல், வேறு நிறுவனத்தின் படங்களில் நடித்து வருவதாகவும் அந்த நிறுவனம் குற்றம் சாட்டியது.
தங்களுடைய பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டபோது ரவி மோகன் உறுதியளித்ததாகவும், ஆனால் பணத்தைத் திருப்பித் தராமல் தனது சொந்தத் தயாரிப்பில் படம் எடுத்து வருவதாகவும் அந்த நிறுவனத்தின் இயக்குநர் பாலசந்தர் தெரிவித்துள்ளார்.
எனவே அவருக்கு வழங்கப்பட்ட முன்பணத்தைத் திரும்பப் பெறவும், ரவி மோகனின் ஈசிஆர் பங்களாவை ஜப்தி செய்து பணத்தைத் திருப்பித் தரவும் கோரி அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் ரவி மோகனின் ஈசிஆர் சொகுசு பங்களாவை ஜப்தி செய்து தரும்படி கூறிய நிலையில், அந்த வீடு தனியார் வங்கியில் கடன் பெற்று வாங்கியதும், வாங்கிய கடனை நடிகர் ரவி மோகன் சரியாக கட்டவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தான் ரவி மோகன் வீட்டிற்கு வாங்கிய கடனை கட்டுபடி பலமுறை வாங்கி மூலம் நோட்டீஸ் அனுப்பியும் எந்த ஒரு முறையான பதிலும் கூறவில்லை. இந்நிலையில் வங்கி அதிகாரிகள் நடிகர் ரவி மோகன் வீட்டிற்கு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர். வாங்கிய கடனை கட்டாவிட்டால் விரைவில் வீட்டை ஜப்தி செய்ய உள்ளதாக வங்கி அதிகாரிகள் அறிவிப்பு நோட்டீஸை ஒட்டினர்.
முன்னதாக வங்கி சார்பில் ரவி மோகனுக்கு கொரியர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதற்கு எந்தப் பதிலும் அளிக்கப்படாத நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறப்படுகிறது.