ஆன்லைன் பட்டாசு விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் – போலீஸார் எச்சரிக்கை!

ஆன்லைனில் வெளியாகும் பட்டாசு விளம்பரங்களை நம்பி, பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய இணைய யுகத்தில், சீப்பு, சோப்பு முதல் மொபைல் போன்கள், லேப்டாப் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் வரை ஆன்லைனில் வாங்கும் பழக்கம் நாளுக்கு நாள் பொதுமக்களிடையே பெருகி வருகிறது.
அதிலும், குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டில் இருந்தே பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அதில் பலரும் ஏமாற்றம் அடைந்த பின்பு, காவல்துறையினரை நாடிச் சென்று புகார் அளிக்கும் வழக்கமும் அதிகரித்து வருகிறது.
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், விளம்பரங்களை பார்த்து ஆன்லைனில் பட்டாசு பொருட்களை பொதுமக்கள் பலரும் வருகின்றனர். இதிலும், பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க இணைய வழி காவல் துறையினர் தொடர்ச்சியான எச்சரிக்கை மற்றும் அறிவுரை விடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்துக்கு, நிறைய புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், புதுச்சேரி காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “உண்மையான பட்டாசு விற்பனையாளர்கள் பெயரில் போலியான வலைத்தளங்களை உருவாக்கி இணைய வழி குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே பொதுமக்கள் இணையத்தில் எந்த பொருளை வாங்கும் முன்பும் அதனுடைய உண்மை தன்மையையும்அதை விற்பவருடைய முழு விபரங்களையும் நன்கு சோதித்து பார்த்தபின் வாங்க வேண்டும்.
இணைய வழி விளம்பரங்களை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம். இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்கவும் அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழி காவல் நிலையத்தில் இலவச தொலைபேசி எண் 1930 மற்றும் 0413-2276144, 9489205246, cybercell-police@py.gov.in மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம். www.cybercrime.gov.in இணையத்தில் புகார் அளிக்கலாம்” என்று தெரிவித்துள்ளனர்.