பேராசிரியர்களுக்கு நீண்ட காலமாக தரப்பட வேண்டிய பதவி மற்றும் சம்பள உயர்வுகள் வழங்கப்படாதது அதிருப்தியைத் தருகிறது என்று சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜோஸ் சார்லஸ் மார்டின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “புதுச்சேரி அரசு கல்லூரிகளில் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் பணியமர்த்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும், பேராசிரியர்களுக்கு நீண்ட காலமாக தரப்பட வேண்டிய பதவி மற்றும் சம்பள உயர்வுகள் வழங்கப்படாதது அதிருப்தியைத் தருகிறது.
இது மாணவர்களுக்கான கல்வியின் தரத்தைப் பாதிக்கும் என்பதால், பேராசிரியர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும்படி புதுச்சேரி அரசிடம் வலியுறுத்துகிறேன். இவ்விவகாரத்தில் புதுச்சேரியில் மூத்த அரசு கல்லூரி பேராசிரியர்கள் வீதிக்கு வந்துபோராடியது வேதனையைத் தருகிறது.
கல்வியாளர்களுக்கே இந்த நிலை என்றால், கல்வியின் நிலையும் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது என்பதை அரசு உணர்ந்து பொறுப்புடன் செயல்படவேண்டும் என கோரிக்கை வைக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.