’இந்தியாவை சாம்பியன் ஆக்கியவர்’… தங்கம் வென்ற தமிழக வீரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து…

ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய வீரர் ஆனந்த்குமார் வேல்குமாருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் சீனியர் ஆண்கள் பிரிவிற்கான 1000மீ. ஸ்பிரின்ட் இறுதிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த்குமார் வேல்குமார் இந்தியா சார்பில் கலந்துகொண்டார்.
இந்த போட்டியில், ஆனந்த்குமார் வேல்குமார் 1:24.924 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இத்தாலி வீரர் டுசியோ மர்சிலி 1:25:145 விநாடிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், பராகுவோயை சேர்ந்த ஜூலியோ மிரெனா ஒர்திஷ் 1:24.466 விநாடிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
இதன் மூலம், ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஆனந்த்குமார் வேல்குமார் பெற்றுள்ளார். முன்னதாக அவர், இதே சாம்பியன்ஷிப் தொடரில் 500 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆனந்த்குமார் வேல்குமாருக்கு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர், நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “2025ஆம் ஆண்டு ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் சீனியர் ஆண்கள் 1000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றதற்காக ஆனந்த்குமார் வேல்குமாரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவரது மன உறுதி, வேகம் மற்றும் உற்சாகம் ஸ்கேட்டிங்கில் இந்தியாவை முதல் சாம்பியனான மாற்றியுள்ளது. அவரது சாதனை எண்ணற்ற இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்திற்கும் நல்வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.