கால்வாய்களைத் தூர்வார விடாமல் தடுத்த நபர்கள்! எதிர்க்குரல் எழுப்பி ஓடவிட்ட மக்கள்!…

ஜேசிஎம் மக்கள் மன்றம் சார்பாக, புதுச்சேரியில் தூர்வாரும் முன்னெடுப்பு நடைபெற்ற போது, தடுக்க முயன்ற சிலரை, பொதுமக்கள் எதிர்குரல் எழுப்பி ஓடவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மழை என்றாலே பலருக்கும் ஆனந்தம் தான். ஆனால், புதுச்சேரியில் ரெயின்போ நகர் மற்றும் கிருஷ்ணா நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மழை என்றாலே அச்ச உணர்வு தான் மேலோங்குகிறது. காரணம், சிறுமழை பெய்தாலே, வீட்டிற்குள் கழிவு நீர் புகுந்துவிடும் அபாயம் நிலவுகிறது. பெரும்மழை என்றால் சொல்லவே வேண்டாம்.
இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணங்கள் என்னவென்று பார்த்தால், முறையான பாதாளச் சாக்கடை வசதி இல்லாதது, மழை நீர் சேமிப்பு அமைப்புகள் இல்லாதது, கால்வாய்கள் முறையாகத் தூர்வாரப்படாதது என அடுக்கிக்கொண்டே போகலாம். இதில் மூன்றாவது காரணமான, கால்வாய்கள் முறையாகத் தூர்வாரப்பட்டாலே பொதுமக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு கிடைத்துவிடும்.
எனவே, மழைக்காலத்துக்கு முன் கால்வாய்களைத் தூர்வாரும் கோரிக்கையை கிருஷ்ணா நகர் மற்றும் ரெயின்போ நகர் மக்கள் தொடர்ச்சியாக முன்வைப்பது உண்டு. ஆனால், புதுச்சேரி அரசு இதனை சரியான நேரத்தில் செய்யாததால் தான், எப்போதும் மழைக் காலங்களில் கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த ஆண்டு, ஃபெஞ்சல் புயல் காரணமாக, புதுச்சேரியின் ஒவ்வொருவர் வீட்டிலும் பெரும் அளவில் சேதம் ஏற்பட்டது. இதற்கு எல்லாம் தீர்வுகாணும் வகையில் தான், ஜேசிஎம் (JCM) மக்கள் மன்றம் சார்பாக, புதுச்சேரி ரெயின்போ நகர் மற்றும் கிருஷ்ணா நகர் கால்வாய்களைத் தூர்வாரும் முன்னெடுப்பு நடைபெற்றது.
ஆனால், இதனை செய்யக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, சிலர் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால், கால்வாய் தூர்வாருதலால் பயன்பெறப்போகும் மக்கள், தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிர்க்குரல் எழுப்பி, அவர்களை ஓடவிட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியை பெருமூச்சு விட்டனர்.
இந்நிலையில், மக்களுக்கான சேவைப்பணிகளில் எவ்வளவு இடையூறுகள் வந்தாலும், எப்போதும் மக்களுக்காக மட்டுமே நிற்கும் என்பதை ஜே.சி.எம். மக்கள் மன்றம் உறுதிபடத் தெரிவித்துள்ளது, மேலும், மக்களுக்கான நலப்பணிகளில் ஜே.சி.எம். மக்கள் மன்றம் செயல்படும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.