தன்னார்வ பணிகளை அதிகாரிகள் தடுத்து மிரட்டல்… ஜே.சி.எம். நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு

ஜே.சி.எம். மக்கள் மன்றம் செய்யும் தன்னார்வப் பணிகளை அரசு அதிகாரிகள் தடுப்பதாகவும், மீறினால் வழக்குப்பதிவு செய்வோம் என மிரட்டுவதாகவும், நிர்வாகி ஒருவர் குற்றம்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜே.சி.எம். மக்கள் மன்றம் முன்னெடுக்கும் தன்னார்வ பணிகளை அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதோடு, மிரட்டலும் விடுத்து வருவதாக நிர்வாகி ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜே.சி.எம். மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘’ஒவ்வொரு மழைக்கும் புதுச்சேரியின் கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் சாமி பள்ளத்தோட்டம் போன்றப் பகுதிகளில், மழை வெள்ளத்தால் பல கோடி ரூபாய் நஷ்டம் உண்டானது.
இந்த முறை ஜே.சி.எம். மக்கள் மன்றம் சார்பில், ஜோஸ் சார்லஸ் மார்டின், கால்வாய்களைத் தூர்வாருவதற்கு எங்களை அனுப்பிவைத்தார். நாங்கள் ஹிட்டாச்சி, லாரி, ஜேசிபி ஆகிய வாகனங்களை வைத்து சுத்தப்படுத்த ஆரம்பித்தோம். நாங்கள் செய்ய ஆரம்பிக்கும்போது, புதுச்சேரி பணித்துறையில் நாங்கள் டெண்டர் விட்டுவிட்டோம், 15 நாட்களில் பணி ஆணை வழங்குவோம் எனத் தெரிவித்தார்கள்.
அதன்பின், அடுத்து ஒரு 15 நாட்களில் நாங்கள் எப்போது வேண்டுமென்றாலும், தூர்வாரும் பணியை மேற்கொள்வோம் எனச் சொன்னார்கள். இப்போதும் பணி ஆணையில்லாமல் இடையில் வந்து பணியைச் செய்துகொண்டுதான் போகிறோம் எனத் தெரிவித்தார்கள்.
அதற்கு நாங்கள், “ஒரு மாதத்திற்குள் மழைக் காலம் முடியப்போகிறது. அதற்குள் வெள்ளம் வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?” எனக் கேட்டோம். ஆனால், பொதுப்பணித்துறையில் நீங்கள் வேலை எல்லாம் செய்ய வேண்டாம், நிறுத்துங்கள். வேண்டுமென்றால் கரையில் தூக்கி போடப்பட்ட கழிவுகளை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு செல்லுங்கள் என்று சொன்னார்கள். நாங்கள் வந்துவிட்டோம்.
திரும்பவும் நேற்று (செப்.18) போலீஸுடன் வந்து பணிகளை நிறுத்தி, வழக்குப்பதிவு செய்தார்கள். இப்போது புதுச்சேரி பொதுப்பணித் துறையும் பணிகளை சரியாக செய்யவில்லை. சேவை அடிப்படையில் ஒருவர் இலவசமாக செய்வதையும் செய்யவிட மறுக்கிறார்கள். டெண்டர் விட்டால், லட்சக்கணக்கில் செலவாகும். அதுவும் மக்களின் வரிப்பணம் தான். அதை ஒரு தொண்டு நிறுவனம் இலவசமாக செய்து கொடுத்தால் அரசுக்கு செலவு மிச்சமாகும்.
ஏன் நீங்கள் இப்பொழுது வருகிறீர்கள் அப்படி என்று இன்னொரு கேள்வியை முன்வைக்கிறார்கள். எங்களுக்கு இப்போதுதான் ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தி உள்ளார். நாங்கள் அதை செய்துகொண்டு இருக்கிறோம்.
ஆனால், இப்போது புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கால்வாய்களைத் தூர்வாரவிடாமல் தடுக்கிறார்கள். மீறி செய்தால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வோம் எனச் மிரட்டுகின்றனர். வேலை செய்யவிட மாட்டோம் எனச் சொல்கிறார்கள். கால்வாயைத் தூர்வாருவதை செய்துகொண்டு தான் இருப்போம். எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக நாங்கள் சந்தித்துக் கொள்வோம் என்று நாங்கள் சொன்னோம்.
லாஸ்பேட்டை காவல் துறையில் எங்களை இருதரப்பிலும் இணக்கமாகப் போக சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் ஜே.சி.எம். மக்கள் மன்றம் சார்பாக, பொதுமக்களுக்கு எங்கு எல்லாம் இடையூறு இருக்கிறதோ, அங்கெல்லாம் நாங்கள் இறங்கி வேலை செய்வோம். அதனால் எந்தவொரு பிரச்னை வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
ஏனென்றால் நாங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறோம்.கெட்டது செய்யவில்லை. மக்களுக்கான நல்லதை நாங்கள் தொடர்ச்சியாக செய்துகொண்டுதான் இருப்போம். நிறுத்தமாட்டோம். இதற்கு புதுச்சேரி அரசிடம் இருந்து என்ன அழுத்தம் வந்தாலும் சந்திக்கத் தயாராகத் தான் இருக்கிறோம். எங்களை மேல்மட்டத்தில் பேசுங்கள் எனச் சொல்கிறார்கள். அப்போது அந்த இலாகாவில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியும்.
நாங்கள் வேலை செய்தால் அவங்க பெயர் கெட்டுப்போயிடும் என்பதால், தன்னார்வத்துடன் கால்வாய்களைத் தூர்வாருவதைத் தடுக்கின்றனர். அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், சில பகுதிகளில் கால்வாயைத் தூர்வாரி பல வருஷம் ஆகிறது என்று குற்றம்சாட்டி வருகின்றனர்’’ என்று தெரிவித்தார்.