தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது – உல்லாசத்தில் ஈடுபட்டது அம்பலம்

ஆரோவில் அருகே தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 9 இருசக்கர வாகனங்கள் மற்றும் சொகுசு காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி காவல்துறையில் ‘ஆபரேஷன் திரிசூலம்’ என்ற திட்டம் மாநிலம் முழுவதும் குற்ற சம்பவங்களை குறைக்கவும், ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்கும் தொடங்கப்பட்டது.
அதன்படி, ரௌடிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், அவர்கள் வீட்டில் ஆயுதங்கள் அல்லது வெடி பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளார்களா என்பதை ஆராய்வதற்கும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுச்சேரி முழுவதும் அந்தந்த சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தை சார்ந்த போலீசார், சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் தலைமையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் குற்ற பின்னணி உடைய ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இடையஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த கோபி, அருண்குமார் ஆகிய இருவரும் தங்களது பைக்குகள் திருடு போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து பாப்பாஞ்சாவடியில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது கார் மற்றும் பைக்குகளில் வந்த மர்ம நபர்கள், போலீஸாரின் வாகன தணிக்கைக்கு நிற்காமல் சென்றனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் பைக்கில் சென்ற ஒருவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அந்த நபர் ஓட்டிச்சென்ற பைக் இடையஞ்சாவடி கிராமத்தில் திருடியது தெரியவந்தது. பின்னர், அவர் அளித்த தகவலின்பேரில், திண்டிவனத்தில் பதுங்கியிருந்த பீப்பா, தமிழ், சந்து ஆகிய மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் திருடிய பணத்தில் ஜவ்வாது மலையில் உல்லாசம் அனுபவித்தாக தெரிவித்தனர். இதனையடுத்து, 9 இருசக்கர வாகனங்கள் மற்றும், திருடுவதற்கு பயன்படுத்திய ஒரு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.