விலைகளில் ஏதேனும் குறைபாடா?… புகார் தெரிவிக்க இலவச உதவி எண்கள் அறிவிப்பு

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், நுகர்வோர்களுக்கு ஏதேனும் குறைபாடு இருந்தால், புகார் தெரிவிக்க இலவச உதவி எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி (03-09-25) புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரும் 22-ம் தேதி முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழ் மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில், புதிய வரி சீர்திருத்தம் இன்று முதல் நாடெங்கிலும் அமலுக்கு வருகிறது.
அதன்படி, சுமார் 375 பொருட்கள் முந்தைய விலையை விட குறைவாகவே நுகர்வோர்களுக்கு கிடைக்கும். எனவே, வணிகர்கள் பில்களில் திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி., விகிதங்களையே குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால், நுகர்வோர்கள் புகார் அளிக்கலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதன்படி, ஜிஎஸ்டி குறித்த நுகர்வோர்களின் புகார்களை 1800-11-4000 என்ற எண்ணில் அளிக்கலாம். அதேபோல, https://consumerhelpline.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாகவும் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.