ஆவின் பொருள்களின் விலை குறைப்பா? திமுக அரசின் திருட்டுத்தனம் – அன்புமணி கண்டனம்

திமுக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் விலை குறைப்பு போன்ற நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி (03-09-25) புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரும் 22-ம் தேதி முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழ் மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில், புதிய வரி சீர்திருத்தம் இன்று முதல் நாடெங்கிலும் அமலுக்கு வருகிறது. ஆனால், ஆவின் பொருட்களின் விலையை குறைக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்குப் பிறகும் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் அதன் பால் பொருள்களின் விலைகளை குறைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி இன்று காலை நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், ஜி.எஸ்.டி வரிக்குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அரசின் சார்பில் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவை செய்தியாக ஒளிபரப்பாகி வருகின்றன.

ஆவின் பால்பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை; இது மக்களை ஏமாற்றும் முயற்சி என்பது தான் உண்மை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்றவாறு பால் பொருள்களின் விலை குறைக்கப்பட வேண்டும்.

ஆனால், ஆவின் நிறுவனம் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, ஆவின் பால் பொருள்களின் அதிகபட்ச விற்பனை விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாத ஆவின் நிறுவனம், வரி எந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதோ, அதற்கு ஏற்றவாறு அடிப்படை விலையை உயர்த்தியுள்ளது.

எடுத்துக்காட்டாக ஒரு கிலோ நெய்யின் அதிகபட்சம் விற்பனை விலை ரூ.700. இதில் அடிப்படை விலை ரூ.625. 12% ஜி.எஸ்.டி வரி ரூ.75 ஆகும். ஆவின் நெய் மீதான ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மதிப்பு ரூ.31 மட்டும் தான். அதன்படி ஆவின் நெய் ஒரு கிலோ ரூ.656-க்கும் மட்டுமே விற்கப்பட வேண்டும்.

அமுல், நந்தினி போன்ற பொதுத்துறை பால் நிறுவனங்கள் இந்த அடிப்படையில் தான் விலைக்குறைப்பு செய்துள்ளன. ஆனால், ஆவின் நிறுவனமோ ஒரு கிலோ நெய்யின் அடிப்படை விலையை ரூ.625-லிருந்து ரூ.669 ஆக உயர்த்தி அத்துடன் ரூ.31 ஜி.எஸ்.டி விலை சேர்த்து அதிகபட்ச விலையாக ரூ.700 நிர்ணயித்துள்ளது.

அதே நேரத்தில் ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் இந்த நாளில் விலையை குறைத்ததாகக் கணக்குக் காட்டும் நோக்குடன் இன்று முதல் நவம்பர் 30 வரை ஒரு கிலோ நெய்க்கு ரூ.40 தள்ளுபடி வழங்குகிறது. இந்த தள்ளுபடியும் கூட ஆவின் நெய், பன்னீர் ஆகியவற்றுக்கு குறைந்த அளவில் தரப்படுகிறதே தவிர, பிற பால் பொருள்களுக்கு தரப்படவில்லை. அவை அதிக விலைக்குத் தான் விற்பனை செய்யப்படுகின்றன.

நவம்பர் மாதத்துடன் இந்த தள்ளுபடி ரத்து செய்யப்படும் நிலையில், டிசம்பர் மாதம் முதல் ஆவின் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்த்தப்படும். திமுக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் இந்த நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம் ஆகும். இதன் மூலம் மக்களை ஏமாற்றி விடலாம் என்று திமுக அரசு நினைத்தால், அவர்களுக்குத் தான் தோல்வி கிடைக்கும். வரும் தேர்தலில் திமுக அரசின் திருட்டுத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *