முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன் அதிரடி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில், நிறைய போலி வாக்காளர்களை சேர்த்து உள்ளனர் என்று பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.

மறைந்த மூத்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் துணைவியாரும், நடிகை மற்றும் பாஜக தலைவருமான ராதிகா சரத்குமாரின் தாயாருமான கீதா ராதாவின் மறைவையொட்டி தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “திரை உலகில் எத்தனை பேர் வந்தாலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் எம்.ஆர்.ராதா. அவரது மனைவியார் கீதா ராதா மறைவு மிகுந்த ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு கொண்டுவந்த எந்த திட்டத்தையும் தமிழக அரசு வரவேற்று பேசியதில்லை. ரேஷன் கடைகளில் கொடுக்கும் அனைத்து பொருட்களும் மத்திய அரசு கொடுப்பது தான். அதில் மாநில அரசு பங்கின் எதுவும் இல்லை.

ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநில அமைச்சர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் ஒவ்வொரு மாற்றங்கள் கொண்டு வந்தார்கள். மக்களுக்கு நிறைய சுமை இருக்கிறது என்று நிறைய கோரிக்கை வந்ததன் அடிப்படையில் வரி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வருவாய் முழுவதும் நாட்டில் உட்கட்டமைப்பிற்கு செலவிடப்படுகிறது. திமுக அரசு மக்கள் விரோத அரசாக தமிழகத்தில் இருக்கிறது. ஜிஎஸ்டி அமலுக்கு பிறகும் ஆவின் விலையை குறைக்காமல் இருந்தனர். பின்னர் போராட்ட அறிவிப்பு பிறகு விலை குறைக்கப்பட்டது.

டிடிவி தினகரனை நட்பு ரீதியாக தான் அண்ணாமலை சந்தித்தார். எம்ஜிஆர் மருத்துவ கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா வருகின்ற அக்டோபர் ஆறாம் தேதி சென்னை வருகிறார். பின்னர் அங்கு இருந்து பாண்டிச்சேரி செல்கிறார்.

மக்கள் பிரச்சனைகளை கண்டித்து நிச்சயம் நாங்கள் அனைத்து பகுதிகளிலும் போராட்டம் நடத்துவோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில், நிறைய போலி வாக்காளர்களை சேர்த்து உள்ளனர்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *