தோல்வியை சந்திக்காத இந்திய அணிக்கு சவால் அளிக்குமா வங்கதேசம்?

ஆசியக்கோப்பை டி20 தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இன்று இந்திய அணியும் வங்கதேசம் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

ஆசியக்கோப்பை தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகள் அனைத்திலும், தோல்வியை தழுவாமல் வெற்றி நடைபோட்டு வருகிறது இந்திய அணி. லீக் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணியை வீழ்த்தி இருந்தது. அதேபோல், சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானையும் துவம்சம் செய்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட 74 (39 பந்துகள்) ரன்கள் குவித்ததோடு, இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த நபராக உள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 233.8ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சுப்மன் கில் தனது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சூர்யகுமார் யாதவ் இன்னும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதேசமயல் திலக் வர்மா மிடில் ஆர்டரில் தனது பங்களிப்பை சரியாக செய்து வருகிறார்.

அதேபோல், பந்துவீச்சில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய அர்ஷதீப் சிங், நூறாவது விக்கெட்டை நெருங்கிக்கொண்டிருக்கும் ஹர்திக் பாண்டியா, ஜாஸ்பிரிட் பும்ரா ஆகியோர் உள்ளனர். இந்திய அணி 2024ஆம் ஆண்டு முதல் 32 டி20 போட்டிகளில் விளையாடி, வெறும் 3 போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது.

மற்றொரு புறம் வங்கதேசம் அணி ‘சூப்பர் 4’ சுற்றில் இலங்கை அணியை வீழ்த்திய உற்சாகத்தோடு களமிறங்கும். அந்த அணியில் மஹெதி ஹசன், முஸ்டபிஷுர் ரஹ்மான் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். தௌகித் ஹிரிதாய் இந்த தொடரில் 127 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடி வருகிறார்.

ஆனாலும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்திய அணிக்கு எந்த வகையிலும் சவால் அளிக்கக்கூடிய அணியாக வங்கதேசம் இல்லை என்பதே உண்மை. இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் 16 போட்டிகளில் இந்திய அணியும், ஒரு போட்டியில் வங்கதேச அணியும் வெற்றிபெற்றுள்ளன. இன்றைய ஆட்டத்தில் ஏதேனும் மாயாஜாலம் நிகழ்ந்தால் வங்கதேசம் வெற்றிபெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *