மாசு கலந்த குடிநீர் விநியோகம்; காங். தர்ணா போராட்டம் – துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் பரபரப்பு

புதுச்சேரியில் மாசு கலந்த குடிநீர் விநியோகத்தை கண்டித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் துணைநிலை ஆளுநர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, நெல்லித்தோப்பு உருளையன்பேட்டை பகுதிகளில் மாசு கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த அசுத்த குடிநீரை குடித்த 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கிடையே நேற்று நெல்லித்தோப்பு பகுதிகளில் கான்வென்ட் வீதி, பள்ளிவாசல் வீதி, ராஜா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பகுதிகளில் மாசு கலந்த குடிநீரை குறித்து 25க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பாதாள சாக்கடை இணைப்புக்காக ஒப்பந்ததாரர் பணிகளை மேற்கொள்ளும் போது அப்பகுதியில் உள்ள குடிநீர் இணைப்பு சேதப்படுத்தியதன் காரணமாக குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் பொதுப்ணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாசு கலந்த குடிநீர் விநியோகத்தை கண்டித்தும் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மாநில அரசை கண்டித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரசார் துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு தரையில் அமர்ந்து திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆனந்தராமன், மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா உள்ளிட்ட 50க்கும் மேற்பட காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரிடம் பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாசு கலந்த குடிநீரை குடித்து பொதுமக்கள் உயிரிழந்து வருவதன் மீது அரசு அலட்சியம் காட்டுவதாகும், இதற்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் சம்பந்தப்பட்ட அமைச்சர், முதல்வர் வந்து பேசட்டும் என தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், “நெல்லித்தோப்பு மற்றும் நகரப் பகுதிகளில் தொடர்ந்து வாசு கலந்த குடிநீரை குறித்து பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோ உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. மேலும் இதுவரை 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஆனால் இதன் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலமைச்சர், அமைச்சர் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூட சொல்லவில்லை. இறந்தவர்களுடைய குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. பொறுப்பற்ற முறையில் ஆட்சியை நடத்தி வருகின்றனர். மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை கூட வக்கில்லாத அரசாக உள்ளது.

பாதுகாக்கப்பட்ட பொன்னீரை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என்று சொன்ன பிரதமரின் வாக்குறுதி என்ன ஆனது? இதற்கெல்லாம் முதல்வர், அமைச்சர் உரிய பதில் சொல்ல வேண்டும். பல தொகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் டிடிஎஸ் அளவு மிக அதிகமாக உள்ளது. இதனால் பலர் சிறுநீரக நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.

இதற்கிடையே உண்ணாவிரத போராட்ட தகவல் அறிந்த மற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் துணைநிலை ஆளுநர் அலுவலகம் முன் குவிந்தனர். அவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்காததால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து தடுப்பு கட்டைகள் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

துணைநிலை ஆளுநர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக கூறி கைவிட்டு வருமாறு போலீசார் அழைப்பு விடுத்தனர். ஆனால் முதல்வர், அமைச்சர் அதிகாரிகள் ஆகியோரும் வந்தால் போராட்டத்தை கைவிட்டு வருவதாக காங்கிரசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *