சிறப்பு மிகு நவராத்திரி விழா! – வீடுகளில் கொலு வைத்து கிராம மக்கள் வழிபாடு

புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் நவராத்திரியை முன்னிட்டு வீடுகளில் கொலு வைத்து வழிபட்டு வருகின்றனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவில் முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியை போற்றியும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டின் நவராத்திரி விழா நேற்று தொடங்கிய நிலையில், நவராத்திரி விழாவையொட்டி புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி சேதராப்பட்டு கிராமத்தில் தாமோதரன் என்பவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள கொலு அனைவரையும் கவர்ந்துள்ளது. இங்கு அலங்கரிக்கப்பட்ட கொலுவில் பல்வேறு தெய்வ சிலைகள், புராணக் கதைகளை எடுத்துரைக்கும் பொம்மைகள் மற்றும் சமூகச் சிந்தனைகளை பிரதிபலிக்கும் சிறிய சிற்பங்கள் என கண்ணைக் கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த கொலுவை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து தரிசித்து வழிபட்டு வருகின்றனர். மேலும் இங்கு வரும் இளம்பெண்களுக்கு தாம்பூலம் வழங்கும் பாரம்பரிய நிகழ்வும் நடைபெற்றது. பெண்கள் அனைவரும் வழிபாடுகளில் கலந்து கொண்டு, அன்னையின் அருளைப் பெறும் விதமாக குங்குமம், மங்களப் பொருட்கள் அடங்கிய தாம்பூலத்தைப் பெற்றனர்.