அபிஷேக் சர்மா அபாரம்; 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் தோல்வி – ஃபைனலுக்கு சென்ற இந்தியா

வங்கதேசம் அணிக்கு எதிரான ஆசியக்கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதிபெற்றன. முதல் போட்டியில் இலங்கை அணியை வங்கதேசம் அணி வீழ்த்தி இருந்தது.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற ஆசியக்கோப்பை ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணியும், வங்கதேசம் அணியும் மோதின. இதில், வங்கதேசம் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சுப்மன் கில் இருவரும், ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் 3 ஓவர்களில் 17 ரன்களே எடுத்தனர். இடையில் அபிஷேக் கொடுத்த கேட்சை விக்கெட் கீப்பர் ஜேக்கர் கோட்டைவிட்டதன் பலனை வங்கதேசம் அனுபவித்தது.

அதன்பிறகு அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடத் தொடங்கினார். இதனால், 4ஆவது ஓவரில் 21 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து பவர்பிளே ஓவர்களில் 72 ரன்கள் இந்திய அணி எடுத்தது. ஆனால், அடுத்த ஓவரில் சுப்மன் கில் 29 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஷிவம் துபே 2 ரன்கள் எடுத்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

37 பந்துகளில் (5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) 75 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மா ரன் அவுட் ஆகி வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5 ரன்களில் (11 பந்துகள்), திலக் வர்மா 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.

கடைசி ஓவர்களில் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 38 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் சார்பில் அதிகப்பட்சமாக ரிஷத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தன்ஷித் ஹசன் 1 ரன்களில் வெளியேறி அணியின் வீழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன்பிறகு, பர்வேஷ் எமோன் 21 ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் வெளியேறினார். அதன்பிறகு களமிறங்கிய வீரர்கள் யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. அனைவரையும் சொற்ப ரன்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் வெளியேற்றினர்.

அதிகப்பட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சைஃப் ஹசன் 69 ரன்கள் எடுத்து, சுமாரான ஸ்கோரை எட்ட உதவினார். இந்திய அணியினர் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினர். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஜாஸ்பிரிட் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இறுதியில் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோடு, இறுதிப்போட்டிக்குள்ளும் நுழைந்தது. ஆட்டநாயகன் விருது அபிஷேக் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

தனது கடைசிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியுடன் மோதவுள்ளது. அந்த போட்டி இந்திய அணிக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர்-21) இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *