தபால் வாக்குகள் எண்ணுவதில் புதிய நடைமுறை… தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ள நிலையில், தபால் வாக்குகள் எண்ணுவதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் பரிந்துரைத்து உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கா்நாடகத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சட்ட விரோதமாக திருத்தப்பட்டதாகவும், இதன்மூலம் வாக்குகள் திருடப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
அதேபோல, பீகாரில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாடினார். இதனையடுத்து, எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சுமத்தி வந்தனர்.
இந்நிலையில், தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிப்பதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது புதிய நடைமுறையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் எண்ணப்படும் வாக்குகள் இறுதியாக உள்ள இரண்டு சுற்றுக்கு முன்பாக தபால் வாக்குகளின் முடிவுகள், அறிவிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான், இறுதியாக உள்ள இரண்டு கட்ட வாக்குகள் எண்ணப்பட வேண்டும். நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை கட்டாய மறு சரிபார்ப்புக்கு உட்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களுக்கும் தேர்தல் ஆணையம் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாமல், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணி அனைத்து சுற்று முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.