ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ மாற்றியது ஏன்? – நீதிபதி விளக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ மாற்றியது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, ஆம்ஸ்ட்ராங்-கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங், மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆகியோர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். விசாரணை ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, 6 மாத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறித்தி இருந்தார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகனின் 21 பக்கங்கள் கொண்ட உத்தரவு நகல் இன்று வெளியானது. வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்ததில் விசாரணை குறித்த நியாயமான சந்தேகம் எழுகிறது என்று அதில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தவர்களை அடையாளம் காட்ட முடியும் என பல சாட்சிகள் இருந்த போதும் குற்றவாளியை அடையாளம் காண்பதற்கான அணிவகுப்பு நடத்தப்படவில்லை வழக்கின் விசாரணை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஊடகங்கள் மற்றும் அரசியல் காரணங்களால் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என நீதிமன்றம் கருதுகிறது.
கொலைக்கான காரணங்களாக முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதற்கும், குற்றப்பத்திரிகையில் உள்ளதற்கும் வேறுபாடு உள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபர்களான சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணா கைது செய்யப்படமால் இருப்பது விசாரணை முழுமையாக நிறைவடைந்துவிட்டதா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
இந்த வழக்கின் விசாரணை நடந்த குற்றத்தை பற்றி மட்டுமே உள்ளதாகவும், கொலைக்கான நோக்கம், பின்னணி மற்றும் பரந்துபட்ட சதி உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்படவில்லை.
கொல்லப்பட்ட நபரின் சமூக முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் நியாமான, பாரபட்சமற்ற விசாரணை தேவைப்படுகிறது. அடிப்படை நடைமுறையான அடையாள அணிவகுப்பு நடத்தாதது, முக்கிய சாட்சிகளை தவிர்த்தது, உள்ளிட்ட காரணங்களால் போலீசாரால் முழுமையான நம்பிக்கையை பெற முடியவில்லை.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் கூட விசாரணையில் உள்ள குறைகள் விசாரணையின் முழுமைத்தன்மை குறித்து கேள்வி எழுப்புகிறது. இந்த வழக்கில் செம்பியம் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்வதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்