இளையராஜா பாடல்கள் விவகாரம்… சோனி நிறுவனத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய சோனி நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தான் இசையமைத்த பாடல்களை தனது அனுமதி பெறாமல் சோனி நிறுவனம் பயன்படுத்தி வருவதோடு பாடல்களை மாற்றி அமைப்பதாகவும் மனுவில் கூறியுள்ளார்.
மேலும், யூ ட்யூப் உள்ளிட்ட தளங்களில் பயன்படுத்தியதன் மூலம் சோனி நிறுவனம் வணிக ரீதியாக பலனடைந்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
சோனி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை காப்புரிமை சட்டத்தை மீறும் செயல் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது பாடல்களை பயன்படுத்தியதன் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தில் 50 சதவீத தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
சோனி நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எக்கோ நிறுவனத்திடம் இருந்து தாங்கள் பாடல்களை உரிமையை பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய சோனி நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.