டித்வா புயல்: இலங்கையில் துவம்சம் – தமிழகக் கடலோரத்தில் தாக்கம் எதிர்பார்த்த அளவுக்கு ஏற்படாதது
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான தாழ்வுப்பகுதி வலுப்பெற்று, இலங்கைக்கு அருகில் ‘டித்வா’ என்ற பெயரில் புயலாக மாறியது. நவம்பர் 27-ஆம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு இலங்கையில் மிக கனமழை பொழிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் 28-ஆம் தேதி முதல் புயல் தமிழக கடலோரத்தை நோக்கி நகர்ந்தது. ராமேச்வரம், ராமநாதபுரம், அதனைச் சுற்றிய பகுதிகள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இடைமறியாத கனமழை பதிவாகியது. தென் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை தாக்கம் உணரப்பட்டது.
ஆனால் 29-ஆம் தேதி சென்னை மற்றும் வடகடலோரப் பகுதிகளைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோது புயல் பல சவால்களை எதிர்கொண்டது. உலர் காற்று புயலின் மையப்பகுதியில் ஊடுருவியதால் ஈரத்தன்மை குறைந்து, மழையை உருவாக்கும் மேகக்குவியல்கள் உருவாகாத நிலை ஏற்பட்டது. புயலின் முன்பகுதி, பின்பகுதியில் மேகக்கூட்டங்கள் இருந்தாலும், மழையை கொடுக்கும் திறன் குறைந்தது.
சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களுக்கு இந்த புயல் குறைந்த மழையை பூர்த்தி செய்யும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். டித்வா புயல் அதன் அமைப்பை வைத்திருந்தாலும், போதுமான மேகங்கள் இல்லாததால் செயலிழந்த புயலாகவே தொடர்ந்தது.
நேற்று இரவு நிலவரப்படி, டித்வா புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 90 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 140 கி.மீ. தொலைவிலும் மழை கொடுக்காமல் நின்றிருந்தது. பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்த இது மெதுவாக வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது.
இந்த புயல் இன்று (திங்கட்கிழமை) பிற்பகலுக்குள் சாதாரண காற்றழுத்த தாழ்வுப் பகுதி அளவுக்கு வலுவிழந்து விடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

