புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பெருவிழா: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
புதுச்சேரி:
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் கிறிஸ்துமஸ் பெருவிழா, புதுச்சேரி முழுவதும் கிறிஸ்தவ மக்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, மாநிலம் முழுவதிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
புதுச்சேரி மிஷன் வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜென்மராக்கனி ஆலயத்தில், கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, குழந்தை இயேசுவை தோளில் சுமந்தபடி ஆலயத்தை சுற்றிவரும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கடலூர்-புதுச்சேரி உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
திருப்பலியின் போது, குழந்தை இயேசுவின் பிறப்பு வரலாறும், நற்செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, குழந்தை இயேசுவை வழிபட்டு ஆன்மிக மகிழ்ச்சியுடன் திரும்பினர்.
இதேபோன்று, புதுச்சேரி வில்லியனூர், காலாப்பட்டு, அரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. கிறிஸ்துவ பெருமக்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடி, இயேசு பிறப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, புதுச்சேரி நகரம் முழுவதும் ஆனந்தமும் ஆன்மிகமும் நிறைந்த சூழல் நிலவியது.

